Tuesday, July 5, 2011

தமிழழகு

தமிழழகு

(பதிற்றந்தாதி)

எண்ணப் பறவை எழுந்துதன் வாய்த்திறந்து
சொன்ன சுவையினைச் சொல்லிடவா? – மின்னிடும்
வண்ண வடிவழகை வார்த்தையில் வார்த்திடும்
கன்னல் மொழியில் கலந்து!

கலந்து கிளர்ந்த களவை எழிலாய்
மலர்ந்து நிறைந்த மனத்தில் - நலமாய்
புலர்ந்து விடிந்த பொழுதின் அழகாய்
வளர்ந்த தமிழை வரைந்து!

வரைய அளைந்திடும் கோலம்! வளர
விரைய அழிந்திடும் காலம்! – விரைந்து
நிறைந்த தமிழழகு நீங்காமல் நிற்க
குறைந்து மறையுமா? கூறு!

கூறும் நலத்தால் குடிகள் மனத்திலே
ஏறும் வளமாய் எழில்தமிழாய்! - வீறுகொண்டு
சேறும் மனத்தில் செழித்திடும் செந்தமிழால்
பேறும் பெருமையும் பார்!

பாருங்கள் என்றதும் பாவலர் பாடிடுவர்!
பார்..எங்கள் பாக்களைப் பார்ப்பதனால் - சீராக்கும்!
ஏர்எங்கள் எண்ணங்கள்! என்றும் தமிழழகைக்
சேருங்கள் செம்மை கொடுத்து!

கொடுத்து வளர்த்த கொடைகளைநாம் பாவில்
எடுத்து வடித்திடுவோம்! இன்பம் - அடுக்கித்
தொடுத்த கவித்தொடரில் துன்பமும் நன்றாய்
விடுக்கும் இனிய விருந்து!

விருந்தின்; அறுசுவையை நாபெறும்! வேண்டும்
மருந்தின் தருசுவையை ஊனே – அருந்தும்!
கருத்தின் பெறுசுவையைக் கற்றோர்!சீர் உற்றோர்
பொருந்தப் பெறுவார் புகழ்ந்து!

புகழும் பணப்பெருக்கால் பூரிக்கும் நெஞ்சை
இகழும் இழிவென்றே! என்றும் - சுகமாய்த்
திகழும் தெளிதமிழ் இன்பத்தில் மூழ்க
மகிழும் மனங்கள் மலர்ந்து!

மலர்ந்து மணம்வீசும் மல்லிகை முல்லை
புலர்ந்த பொழுதிலே வாடும்! - பலமாய்
வளர்ந்து தவழ்ந்திடும் வண்டமிழ்ப் பெண்ணோ
நிலம்போல் நிற்பாள் நெடிது!

நெடிதென்று வாழ்வை நினைத்து வருத்தும்
குடிகளில் கோமான் செயலைப் – பொடிக்கத்
துடிக்கும் இதயத்தில் தோன்றும் தமிழோ
இடிக்கும் இடியென எண்ணு!

அருணா செல்வம் 25.01.2011
Tuesday, June 28, 2011

காதல்

காதல்


ஆதி மனிதன் வந்தமுதல்

      ஆசை அனைத்தும் பிறந்தாலும்

பாதி மனித வாழ்வினிலே

        பணம்தான் ஒன்றே மகிழ்வென்று

மோதி மோதி வாழ்ந்துவரும்

      முயற்சி யுடைய மனிதர்களே!

சேதி ஒன்றை நான்சொல்வேன்!

      செய்வீர் காதல் அதனூடே!


என்ன அதிலே இருக்கிறது?

      எடுத்துச் சொல்ல யார்வருவார்?

சொன்னால் அதிலே சுவைவருமா?

      சொல்லி பார்த்தேன் காதலென்று!!

சொன்ன உடனே உடம்பெல்லாம்

      சூடு தணிந்த நிலைகண்டேன்!

என்றன் நாவின் உமிழ்நீரும்

      என்ன சுவையாய் இனிக்கிறது!


சொல்லச் சொல்ல இவ்வார்த்தைச்

      சுகத்தை மேலும் அளிக்கிறது!

மெல்ல மெல்ல உள்நுழைந்து

      மேனி முழுதும் சிலிர்க்கிறது!

வல்ல வல்ல கவிகளிடம்

      வளைந்து வளைந்து விளையாடி

நல்ல நல்ல கற்பனையால்

      நாளும் மேலும் பொலிர்கிறது!


உண்மை காதல் வந்துவிட்டால்

      உடனே சிறகும் முளைத்துவிடும்!

எண்ணம் எல்லாம் அதைநினைத்து

      ஏங்கி ஏங்கி மனமகிழும்!

உண்ணும் உணவும் மறந்துவிடும்!

      உறக்கம் எங்கோ தொலைந்துவிடும்!

கண்கள் திறந்தே இருந்தாலும்

      கனவு உலகில் மிதக்கவிடும்!


பத்துப் பொருத்தம் பார்க்காது!

      படிப்பைக் கூட நினைக்காது!

சொத்து சுகத்தை ஏற்காது!

      சோசி யத்தை மதிக்காது!

கத்தும் சாதி பேதத்தைக்

      காதில் போட்டுக் கொள்ளாது!

யுத்தம் வீட்டில் நடந்தாலும்

      உறுதி யாக கைபிடிக்கும்!


எதுதான் காதல் என்றேநாம்

      எடுத்துச் சொல்ல முன்வந்தால்

இதுதான் காதல் என்றுசொல்லி

      இனிமை சேர்க்க முடியவில்லை.

மதுவோ குடித்தால் மனமகிழும்!

      இதுவோ நினைக்க மனம்சுழலும்!

எதுவோ அதிலே இருக்கிறது!

      இதனால் உலகம் சுழல்கிறதோ!


காதல் பிடிக்கா தென்பவரும்

      காதல் கவிதை ரசித்திடுவார்!

காதல் உண்மை என்பவரும்

      காதைத் தீட்டிக் கவிகேட்பார்!

காதல் பொய்யே என்பவரும்

      கவியின் அழகில் மயங்கிடுவார்!

காதல் காமம் என்பதெல்லாம்

      கடவுள் கொடுத்த வரமன்றோ!!


கடவுள் கொடுத்த வரங்களிலே

      காதல் மட்டும் இல்லையென்றால்

உடம்பு மட்டும் இங்கிருக்கும்

      உணர்வோ இன்றி உலவிவரும்!

திடமாய் மனது இருந்தாலும்

      தேவை எதையும் நினையாமல்

இடமாய் பார்த்து அமர்ந்துகொண்டு

      இறப்பை எண்ணிக் காத்திருக்கும்!


ஓடி ஓடி உழைக்கின்றோம்!

      உயர்வைத் தேடி அலைகின்றோம்!

தேடித் தேடிப் பொருள்குவித்தும்

      தேடு கின்றோம் நிம்மதியை!
 

நாடி நலிந்து போனபின்பே

      நடந்த தெல்லாம் எண்ணஎண்ண

கூடி மகிழா காதலின்றேல்

      கொண்ட வாழ்க்கை வீண்அன்றோ!



அருணா செல்வம்

29.04.2011


வலை

வலை


துளைகள் கொண்ட வலைகொண்டு

      தூங்காக் கடல்மேல் சென்றிடுவார்!

களைப்புக் காணா மனத்துடனே

      காத்தி ருந்து வலைவிரிப்பார்!

வளைக்கை அணிந்த பெண்ணவளின்

      வளைக்கும் கண்போல் மீன்கிடைக்கத்

திளைக்கும் நெஞ்சில் தீமையின்றித்

      திரும்பி வருவார் மீனவர்தாம்!


நிலையே இல்லா உலகத்தில்

      நிலையாய் என்றும் நிற்பதற்கே

மலைபோல் உயர்ந்த கருவமைய

      மனத்தை வலையாய் விரித்திடுவார்!

இலையே ஏதும் இவ்வுலகில்

      எல்லாம் நம்மின் எண்ணமென்றும்

அலைபோல் கவிதை சுரந்துவர

      அமிர்தாயத்; தருவார் கவிஞர்தாம்!


சிலைபோல் இருக்கும் பெண்களைத்தம்

      செழிக்கும் வாழ்வில் சிறைவைக்கக்

கலைகள் கலந்த மொழிபேசிக்

      காதல் வலையை விரித்திடுவார்!

விலையே அற்ற பெண்ணன்பு

      விரும்பும் வகையில் கிடைத்துவிட்டால்

தலையில் சற்றுக் கனமேறத்

      தாவிக் குதிப்பார் காளையர்தாம்!


கொலையே செய்து இருந்தாலும்

      குலைந்து போகாச் சட்டத்தை

வலைத்து வெற்றி பெறுவதற்கே

      வார்த்தை வலையை விரித்திடுவார்!

குலைக்கும் நாய்போல் குரலுயர்த்திக்

      கொஞ்சம் கூட இரக்கமின்றி

விலையாய்ப் பணத்தை வாங்கித்தம்

      வயிற்றை வளர்ப்பார் வழக்கறிஞர்!


வலையாய் எதையும் விரித்தாலும்

      வகையாய் அதிலே மாட்டாமல்

நிலையாய் நிற்கும் நெஞ்சமெது?

      நினைக்க நெருடும் ஒவ்வொன்றும்!

அலைபோல் தொடரும் அடுக்கடுக்காய்

      ஆசை அலையை அடக்கிவிட்டால்

வலையை விரித்தும் சிக்காமல்

      வாழும் வழியோ கிடைக்குமன்றோ!



அருணா செல்வம் 27.06.2011
Friday, June 17, 2011

திருவடி

திருவடி


திருவடியைத் தேடிநின்றேன்! தீமை யில்லாத்

      தெய்வமாகத் தெரிந்ததென்றன் தாயின் அன்பு!

கருவறைக்குள் இருந்தபோதும் கருணை நெஞ்சம்!

      கலிகாலம் காணுலகில் பிறந்த போதும்

ஒருவேலை தவறாமல் உண்ணத் தந்தும்

      ஓயாமல் கண்விழித்தும் காத்த தெய்வம்!

திருவருளால் கிடைத்திட்ட தாயை என்றும்

      தெய்வத்தின் திருவடியாய் வணங்க வேண்டும்!


கூட்டினிலே வாழ்ந்துவந்த குருவி போலக்

      குடல்நடுங்கி அடிமையாக வாழ்ந்தோம் அன்று!

ஏட்டினிலே பெயர்பேசும் அளவில் நன்றே

      திசையெட்டும் பார்த்திடவே உயர்ந்தோம் இன்று!

நட்டினிலே நமக்காக உரிமை வேண்டி

      நல்லவல்ல சுதந்திரத்தை வாங்கித் தந்த

தீட்டிவைத்த வைரமான தியாக நெஞ்சைத்

      தெய்வத்தின் திருவடியாய் வணங்க வேண்டும்!


ஏழையாக இருந்தாலும் தவறே இல்லை!

      ஏமாற்றும் கயவர்கள் சொல்லைக் கேட்டுக்

கோழையாக வாழ்ந்துவந்த பெண்கள் இன்று

      கோதாவில் இறங்கவுமே தயங்க வில்லை!

வாழையடி வாழையாகத் வாழ்ந்த அவளை

      வளமான பகுத்தறிவு வழியைக் காட்டித்

தாழாமல் தலைநிமிர வைத்த அந்தத்

      தலைவரையே திருவடியாய் வணங்க வேண்டும்!


உருமாறி வளர்ந்தாலும் உலகைக் காண

      ஓயாமல் கற்கின்றோம் உவகை கொண்டு!

குருவளித்த போதனையால் உருகும் நெஞ்சம்!

      குழப்பத்தால் வருங்கோபம் குலைந்து போகத்

திருக்குறளின் இருவடியைப் படித்தால் போதும்!

      தெளிவான மனமமைந்தே உயரும் வாழ்க்கை!

திருக்குறளின் அடிகளையே உலகில் என்றும்

      தெய்வத்தின் திருவடியாய் வணங்க வேண்டும்!



அருணாசெல்வம் 16.07.2011
Friday, June 10, 2011

அன்னை தெரசா




அன்னை என்றதும்
ஆவியைத் தொடு

அதிசயம் என்னவது?
தன்னில் வைத்துநல்
தரணியில் காத்திடும்
தன்னலம் அற்றதது!
உன்னில் உள்ளதும்
என்னில் உள்ளதும்
உலகினில் உயர்ந்தது!
இன்னல் போக்கிநல்
இனிமையை ஊட்டிடும்
இன்பத்தின் எல்லையது!


மண்ணில் வாழ்ந்திடும்
மாபெரும் தெய்வமாய்
மனதினில் நிற்பதது!
விண்ணில் பொழிந்திடும்
விளைநிலம் குளிர்ந்திட
விளைத்திடும் அமிழ்தமது!
கண்ணில் உள்ளநல்
கருவிழி ஒளியினைக்
காத்திடும் இமையானது!
பெண்ணில் உயர்வென
பெற்றநற் பேற்றினால்
பேதமை அற்றதது!


முன்னை தெய்வங்கள்
முன்னே இருந்ததாய்
மூத்தோர் முழங்கினரே!
அன்றும் கண்டதில்லை!
இன்றும் கண்டதில்லை!
இன்னும் தேடுகின்றோம்!
அன்னை தெரேசாவின்
அருளைக் கண்டபின்
அன்பெனும் தெய்வமெலாம்
முன்னே தெரிந்தது
முத்தோர் சொன்னநல்
முப்பெருந் தேவியென!


வென்னிற உடையினில்
வெண்புறா சாயலில்
வேதவர் உடலுருவம்!
பொன்னிற முகத்தினில்
பொருமைக்குப் பரிசாய்
பொதிந்திட்ட முகச்சுறுக்கம்!
தன்னிரு கையையும்
தந்திட ஏந்திடும்
தவத்திரு காட்சியெல்லாம்
என்னிரு கைகளும்
இரங்கு வார்க்குதவ
ஏங்குதே என்பதன்றோ!


கருணை மழையினைக்
கண்களால் பொழிந்திடும்
கர்த்தரின் தூதுஅவர்!
பொருமை என்பதின்
பொருளின் பொருளினைப்
புரிந்திட வைத்தாரே!
அருமை குறள்தந்த
அன்பின் பொருள்படி
அமைந்த நற்குணத்தால்
பெருமை என்றுநாம்
பேசிடும் புகழெனும்
பேற்றினும் உயர்ந்தவரே!


பெற்றோர் உற்றோரின்
பற்றினை விட்டவர்
பார்வைக்குப் புனிதமவர்!
கற்றோர் தேடிடும்
கல்வியின் பெருமையின்
கருவாய் இருப்பவரே!
நற்பேர் கொள்வது
நாடினோர்க் குதவிடும்
நல்மனம் கொண்டதனால்
நிற்பார் நெஞ்சினில்
நிலைத்திடும் தியாகத்தின்
திலைத்திடும் தீஞ்சுடராய்!


மண்மேல் வாழ்ந்திடும்
மக்களின் மனத்தினில்
மங்கையர் திலகமவர்!
விண்மேல் வாழ்ந்திடும்
விண்ணவ தேவர்க்கும்
விளக்காய் இருந்தவரே!!
பெண்போல் இருப்பினும்
பெற்ற நற்குணத்தால்
பேசிடும் தெய்வமிவர்!
கண்முன் தெரிந்திடும்
கருத்தினில் புகுந்தநல்
கடவுளின் கடவுளிவர்!


அருணா செல்வம் 26.05.2011
Monday, March 28, 2011

திருக்குறள்

திருக்குறள்
(அறுசீர் விருத்தம்)

சின்னச் சின்னச் சொல்லெடுத்துச்
செந்தேன் கடலில் ஊறவைத்துக்
கன்னல் கொடியில் நாரெடுத்துக்
 கனியின் சாற்றில் நனைத்தெடுத்து
வண்ண வண்ணப் பூக்களினை
வடிவாய்க் கைகள் தொடுப்பதுபோல்
கன்னித் தமிழைச் சேர்த்தெழுதிக்
கவியில் கருத்தைக் தொடுத்தாரோ?


எண்ணம் எல்லாம் தமிழாகி
எழுதும் எழுத்தில் கலந்துவிட
விண்ணில் பூத்த விண்மீனே
வேண்டி வந்து விழுந்துவிட
பொன்னில் பூத்த பொற்பூப்போல்
பொலிந்து சொற்கள் மின்னிவிட
கண்ணில் இருக்கும் பாவையைப்போல்
கருவை உருவாய்ச்; சேர்த்தாரோ?


எதுதான் இல்லை திருக்குறளில்?
எடுத்துப் புரட்டிப் பார்த்திட்டேன்!
மதுதான் குறள்கள் ஒவ்வொன்றும்
மனத்தை நன்றே மயக்கிவிடும்!
அதுதான் அன்பும் அறத்தையும்
அழியாப் புகழை அளிக்கிறது!
இதுதான் வாழ்க்கைத் தத்துவமாம்!
இதயம் ஏந்தி வணங்குகிறேன்!


அருளும் பொருளும் இன்பமென
அழகாய்ப் பிரித்தார் முப்பாலில்!
உருளும் மனத்தை நிலைநிறுத்த
உயர்வாய்ச் சொன்னார் அறப்பாலில்!
இருளும் மனிதர் வாழ்வுயர
ஏற்றம் மொழிந்தார் பொருட்பாலில்!
மருளும் மங்கை மனமகிழ
மதுவைக் கலந்தார் இன்பத்தில்!


அறமும் அன்பும் இல்வாழ்வில்
அமையும் அழகை எடுத்துரைத்தார்!
புறமும் பொறையும் பொதிந்துவிடப்
புகழைப் பெறவே வழிசொன்னார்!
பிறனில் விழையாத் தன்மையினால்
பெருகும் பேற்றை வகுத்திட்டார்!
துறவும் தவமும் துறந்தோர்க்கே
பிறவும் சொன்னார் அறப்பாலில்!


தெரிந்து தெளிதல் என்னென்றும்
தெளிவு என்ப(து) என்னென்றும்
அறிவாம் உடைமை என்னென்றும்
அரணும் என்பது என்னென்றும்
குறிப்பும் அறிதல் என்னென்றும்
குடிமைப் பெருமை என்னென்றும்
பெரியார் துணையும் வேண்டுமென்றும்
பிரித்து உரைத்தார் பொருட்பாவில்!


மோதல் கூடக் காதலிலே
மோகம் என்று மொழிந்திட்டார்!
வேதம் சொன்ன பெண்சிறப்பை
வேண்டும் அளவு உயர்த்திட்டார்!
பாதல் படைக்கும் பாவலர்கள்
படித்தால் கற்பனை வளம்பெருகும்!
காதல் சிறப்பைக் கருத்துடனே
கவிதை படைத்தார் இன்பத்தில்!


அருளாய் நெறியாய் அமுதமாய்
அழகாய் ஒழுங்காய் அறிவுடனும்
கருத்தாய் அமைந்த கவியமுதைக்
கருத்தில் கொண்டு படித்திட்டால்
அருளும் பொருளும் என்னென்றும்
அமைந்த வாழ்க்கை மெய்யென்றும்
உருளும் மனமும் பொய்யென்றும்
உயர்ந்த கருத்தை அறிந்திடலாம்!

அருணா செல்வம்
24.06.2010
Sunday, March 27, 2011

கண்கள்

கண்கள்

எண்ண பறவை சிறகுவிரித்து
எழுந்து பறக்க உதவிடும்!
வண்ணம் என்பது என்னவென
வகையைப் பிரித்து உணர்த்திவிடும்!
உண்ணும் முறையும் உயிர்வாழ
எண்ணும் மானிட மனங்களுக்குக்
கண்கள் என்பது ஓருருப்பு!
காணும் செயலால் பேருருப்பு!

விண்ணில் இருக்கும் விளக்கென்ற
வியக்கும் கல்வி அறிவுதனை
மண்ணில் இருக்கும் மாந்தர்கள்
மயக்கம் இன்றி கற்றுவிட்டால்
கண்கள் பெற்ற பயன்தனையே
கடைசி வரையில் பெறுறுவிடும்!
எண்ணும் செயலும் உயர்வாக
என்றும் தொடர்ந்து புகழெடுக்கும்!

குறும்பு பார்வை குத்தியிழுக்கும்!
குவலை மலர்கள் மறைந்திருக்கும்!
கரும்புச் சாற்றின் சுவையிருக்கும்!
காதல் அதிலே கமழ்ந்திழுக்கும்!
அரும்புப் போன்று கண்விரிய
ஆசை வண்டாய் ஆடிவரும்!
இரும்பு உடலாய் இருந்தாலும்
இலவம் பஞ்சாய் மிதக்கவிடும்!

பண்கள் படைக்கும் பாவலர்கள்
பசுமைத் தமிழில் மைநிரப்பிப்
பெண்கள் கண்ணை வண்டென்றும்
பிளக்கப் பாயும் அம்பென்றும்
விண்ணில் ஓடும் மீனென்றும்
மண்ணில் வாடும் மலரென்றும்
தண்ணீர் வாழும் கயலென்றும்
தாகத் துடனே எழுதிடுவார்!


பெண்ணின் கண்கள் போதைதரும்!
பூத்த மலரால் பாதைதரும்!
கண்கள் பேசும் மொழியாலே
காளை நெஞ்சம் சோலைபெரும்!
மண்ணில் மகத்தாய் வாழ்ந்தாலும்
விண்ணில் மிதக்க விட்டுவிடும்!
கண்ணும் கண்ணும் கவ்வுவதால்
கண்ணே காதல் பிறப்பிடமாம்!

கட்டி அணைக்கும் காதலனும்
கண்ணே என்பான் கனிவாக!
தொட்டில் போடும் தாயவளும்
தூக்கி மகிழ்வாள் கண்ணென்றே!
மொட்டில் இருக்கும் தேன்போல
மூழ்கி இருக்கும் காட்சிகளைக்
கட்டும் பாட்டில் கட்டிவிட்டு
கவிதை மொழியும் கருத்தாக!

பார்க்கும் காட்சி பாரங்கள்!
பசுமை நிறைந்த கூவங்கள்!
ஏற்கும் விதியின் விளையாட்டாய்!
எதிர்க்க முடியா கண்மயங்கும்!
வேர்க்கும் உடலில் கண்ணிருந்தும்
விருப்பம் மின்றேல் கண்கலங்கும்!
தீர்க்கும் தெய்வம் வருமென்று
தேடித் தேடிக் கண்ணுறங்கும்!

அருணா செல்வம்
21.03.211